Thursday, 21 August 2014

Blood Donation Camp 2014 - 2015

Guru Nanak College, Velachery, Chennai-600 042
Blood Donation Camp Report
The NSS, YRC, NCC & Rotaract Club Units of Guru Nanak College and Rotary Club - Chennai have organized a Blood Donation Camp on 6th August 2014 at Teg Bahadur Auditorium, Guru Nanak College. This Camp was coordinated by the NSS / NCC / YRC / ROTARACT CLUB Programme Officers & Volunteers and Rotary Club - Chennai. It has been organized effectively with help of Dr. M. Selvaraj, Principal and the Management of Guru Nanak College.

The Chief Guest of the function Dr. M. Selvaraj, Principal, Guru Nanak College, inaugurated the Camp and encouraged the students to donate the blood. Around 300 students of Guru Nanak College have participated and donated the blood to The Tamil Nadu Dr. M.G.R. Medical University, Chennai.



Wednesday, 13 March 2013

குருநானக் கல்லூரி -நாட்டுநலப்பணித்திட்டம்- சிறப்பு முகாம் நிகழ்வுகள்


குருநானக் கல்லூரி-வேளச்சேரி-சென்னை-600042
நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்
நன்மங்கலம் – 01.03.2013 முதல் 07.03.2013


சென்னை குருநானக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் சிறப்பு முகாம், 1.3.2013 முதல் 7.3.2013 வரை ஏழு நாள்கள் நன்மங்கலம் முதல்நிலை ஊராட்சி ஒன்றியத்தில் சிறப்புற நடைபெற்றது.
முகாம் துவக்க விழா:
இம்முகாமின் தொடக்க விழா மார்ச் மாதம் முதல் தேதி 10.00 மணிக்கு சத்ய சாய் முதியோர் இல்லத்தில் நடைபெற்றது. சத்ய சாய் அறக்கட்டளையின் உறுப்பினர். பி.ஸ்ரீதர் அவர்கள் தொடக்க உரையாற்றினார்.  அச்சமயம் அவர் மாணவர்களின் நற்செயல்பாடுகள் எவ்விதம் அமைய வேண்டும் என்பது குறித்துப் பேசினார். கல்லூரி முதல்வர். முனைவர். மெர்லின் மொரைஸ் அவர்கள் தலைமை தாங்கினார். தொடக்க விழாவின் நிறைவில் இம்முகாமில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

முகாமில் நடைபெற்ற சீரமைப்புப் பணிகள்:

மாணவர்கள் சிறப்பு முகாம் முதல் நாளான 1.3.2013 அன்றே தம் பணிகளைச் சீரிய முறையில் செய்தனர். சத்ய சாய் முதியோர் இல்லம் மற்றும் அதனையொட்டி அமைந்துள்ள சாய்பாபா கோவிலில் உள்ள தேவையற்ற புட்களை நீக்கி மாணவர்கள் சுத்தப்படுத்தினர்.

முதியோர் இல்லத்தில் முதியவர்களின் அறைகளைத் தூய்மைப்படுத்தினர். முதியோர் இல்லத்தை ஒட்டிய பகுதியில் இருந்த கால்வாய் அடைப்பை மாணவர்கள் தாங்களாகவே முன்வந்து அடைப்பை நீக்கிச் சீரமைத்தனர்.

நன்மங்கலத்தில் உள்ள அம்மன் கோவில் சுற்றுப்பிரகாரங்களைச் சுத்தப்படுத்தினர். கோவிலின் தண்ணீர் தொட்டியைச் சுத்தப்படுத்தினர். கோவிலில் புதர் மண்டியிருந்த பகுதிகளைச் சீரமைத்தனர். கோவிலைச் சுற்றிலும் பூச்செடிகளை நட்டுவைத்தனர்.

சத்யசாய் மேல்நிலைப்பள்ளியின் மைதானத்தைச் சீரமைத்து சுற்றுச்சுவர்களுக்கு சுண்ணாம்பு அடித்தனர்.

2.3.2013 அன்று நன்மங்கலத்தில் அமைந்துள்ள கிளைநூலகத்தில் பராமரிப்புப் பணிகளைச் செய்தனர். நூலகத்தில் உள்ள பல்வேறு பொருண்மைகளைக் கொண்ட நூல்களைத் தரமதிப்பீடு செய்து வரிசையாக அதனை அடுக்கிக் கொடுத்தனர். நூலகத்தைச் சுற்றியுள்ள புதர்களை நீக்கி அதனை மக்கள் பயன்பாட்டுக்குரிய பகுதியாகச் சீரமைத்தனர்.

முகாமின் பொழுது நடைபெற்ற ஆளுமைத்திறன் பயிற்சிகள்:
3.3.2013 – ஞாயிற்றுக்கிழமை  மதியம் 3.30 மணியளவில் பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் TCS நிறுவனத்தின் மேலாளர் திரு. ஆனந்தவேலு மற்றும் அவரது குழுவினர், மாணவர்களுக்கு பல்வேறு பேரிடர்ச் சூழல்களில் தற்காத்துக் கொள்ளும் முறைகளைப் பயிற்றுவித்தனர். நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களும் நன்மங்கலத்தைச் சார்ந்த பொதுமக்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இப்பயிற்சியில் பங்கேற்ற மாணவர்கள் தாங்களாகவே முன்வந்து பயிற்சியினை செய்து காட்டினர்.



4.3.2013 – திங்கள் கிழமை மதியம் 3.30 மணியளவில் மானுட வாழ்வில் பின்பற்ற வேண்டிய அறநெறிகள் பற்றி ஸ்ரீ சத்ய சாய் மேல்நிலைப்பள்ளியின் நிர்வாகி திரு. குமாரசாமி அவர்கள் எடுத்துரைத்தார். மனக்கட்டுப்பாடுகள் மனிதனை எவ்விதம் வழிநடத்தும் என்பதையும், அகந்தை அற்ற வாழ்வால் கிடைக்கும் நன்மைகளையும், பிறருக்காக உழைக்கும் பொழுது கிடைக்கும் மனநிறைவையும் மாணவர்களுக்கு சிறப்புற விளக்கினார். தொடர்ந்து மாணவர்களுடனான கலந்துரையாடலுன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.


5.3.2013 – செவ்வாய் கிழமை - கல்லூரி முதல்வர், இயக்குனர், ஆங்கிலத்துறைப் பேராசிரியர்கள் முதலியோர் நாட்டுநலப்பணித்திட்ட முகாமிற்கு வருகைதந்து மாணவர்களின் பராமரிப்புப் பணிகளைப் பார்த்து பாராட்டிப் பேசினர். மாணவர்கள் ஆற்றிய நற்தொண்டினை கல்லூரிமுதல்வர் நேரிடையாகக் கண்டு அவர்களை வாழ்த்தினார். ஆங்கிலத்துறைப் பேராசிரியையும், முன்னாள் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலருமான திருமதி. கலாநிதி அவர்கள் மாணவர்களுக்கு நாட்டுநலப்பணித்திட்ட பாடலை பாடிக் காண்பித்து மாணவர்களையும்   பாடச்செய்தார்.   ஆங்கிலத்துறைப்  பேராசிரியர்கள்     .திரு. குமரன் அவர்களும், திருமதி. ஈஸ்வரி அவர்களும் மாணவர்களின் தன்னலமற்ற உழைப்பை மனம்திறந்து பாராட்டினார்கள்.


6.3.2013 – புதன் கிழமை மதியம் 3.30 மணியளவில் மனிதவள ஆற்றல் பயிற்றுநர் திரு சந்தானம் அவர்கள் மாணவர்களிடையே மனநலம், உடல்நலம், உயிர்நலம் என்ற தலைப்பில் உரையாற்றினார். மாணவர்களுக்கு மனதையும் உடலையும் கட்டுக்குள் வைப்பதற்கான எளிய உடற்பயிற்சி, மனப்பயிற்சி ஆகியவற்றைப் பயிற்றுவித்தார். விழாவிற்கு நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. பாஸ்கரன் தலைமை தாங்கினார். அவர் மாணவர்கள் முகாமில் மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு சீரமைப்புப் பணிகளை நேரில் பார்வையுற்று மாணவர்களை வாழ்த்திச் சென்றார்


பிற நிகழ்ச்சிகள்:
மக்கள்தொகை கணினிப் பதிவுக்கான கணக்கெடுப்பு:
சமூக வளர்ச்சியில் மாணவர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. மாணவர்கள் தாம் வாழும் பகுதியில் உள்ள மக்களின் பொருளாதார, வாழ்வாதாரச் சூழல்களை அறிந்து அவர்களுக்கு உதவிகரமாக இருக்க வேண்டும் என்பதற்காக, நா.நலப்பணித்திட்ட தொண்டர்கள் முகாம் அமைத்திருந்த நன்மங்கலம் பகுதி மக்களின் வாழ்வாதார நிலைமை, பொருளாதாரச் சூழல் சார்ந்த கணினிப்பதிவு கணக்கெடுப்பை ஊராட்சி ஒன்றியத்துடன் இணைந்து மேற்கொண்டனர்.  முகாம் நிறைவின் பொழுது தாங்கள் எடுத்த கணக்கெடுப்பை ஊராட்சி ஒன்றியத் தலைவர். திருமதி. செல்வராணி சுந்தர் அவர்களிடம் மாணவர்கள் சமர்பித்தனர். இதில் அப்பகுதி மக்களின் நிலை, கல்வி வளர்ச்சி, தொழில்முறை ஆகியவற்றை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.

பாட்டி- தாத்தா பாச விழா:
மாணவர்கள் தாங்கள் தங்கியிருந்த முதியோர் இல்லத்தில் வசித்திருந்த ஆதரவற்ற முதியோர்களை ஒவ்வொரு நாளும் சென்று அவர்களோடு பேசி அளவளாவி மகிழ்ந்தனர். அவர்கள்தம் அனுபவங்களையும், அறிவுரைகளையும் மாணவர்கள் பாடமாகக் கற்றனர். ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு உணவு கொடுத்த பின்னரே தாங்கள் உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். பாட்டி தாத்தாக்களை தங்கள் சொந்த பாட்டிதாத்தாக்களாகவே கருதி அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்தனர்.


பள்ளி மாணவர்களுக்கான பல்திறன் பயிற்சி:
நன்மங்கலம் அரசினர் நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு உடல்திறன் மற்றும் அறிவுத்திறன் சார்ந்த போட்டிகளை நாட்டுநலப்பணித்திட்ட தொண்டர்கள் நட்த்தி பரிசுகளை வழங்கினர். மாணவர்களுக்கு புதிர் மற்றும் வினாடி வினா போன்ற போட்டிகளையும் நடத்தினர். பள்ளி மாணவர்களுக்கு நாட்டுநலப்பணித்திட்டத்தின் சேவைகளை எடுத்துரைத்து அவர்களையும் அதில் பங்கேற்கும்படி அறிவுறுத்தினர்.


இயற்கையைப் போற்றுவோம்:
மாணவர்கள் முகாம் நடைபெற்ற ஏழு நாள்களுமே மக்கள் தம் வீடுகளில் மரக்கன்றுகள் நடுவதற்கு அனுமதி கேட்டு மரக்கன்றுகளை நட்டனர், அவற்றை நீரூற்றி பேணும்படியும் கேட்டுக் கொண்டனர். கோவில்களிலும் மரக்கன்றுகளை நட்டனர். மரம் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகளை மக்களுக்கு எடுத்துக் கூறி இயற்கையைப் போற்றுவோம் என்ற கொள்கையை பரப்பினர்.


கலைநிகழ்ச்சிகள்:
மாணவர்கள் தினமும் மாலை மற்றும் இரவுப்பொழுதுகளில் பல்வேறு பொருண்மைகள் கொண்ட விழிப்புணர்வு நாடகங்களை இயற்றி அவற்றை நடித்தும் காண்பித்தனர். மாலைப் பொழுதில் நடைபெற்ற பெண்கல்வி, இயற்கையைப் போற்றுவோம், சமூக வளர்ச்சியில் இளையோர் பங்களிப்பு உள்ளிட்ட நாடகங்களை பொதுமக்களும் பார்வையிட்டு மகிழ்ந்தனர். இரவுப்பொழுதில் முன்னாள் நாட்டுநலப்பணித் திட்ட தொண்டர்களின் கலைக்குழுவைச் சார்ந்த மூத்த மாணவர்கள் தங்கள் இளைய மாணவர்களுக்கு தெருக்கூத்து, நாடகம் ஆகியவை குறித்த பயிற்சிகளை அளித்தனர்.

முகாம் நிறைவு விழா:
7.3.2013 வியாழன் முகாமின் நிறைவு நாளாக அமைந்தது. அதனையொட்டிபல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இரத்ததான முகாம்:
மாணவர்கள் நன்மங்கலத்தில் உள்ள மக்களுக்கு, இரத்ததானதின் தேவையை வலியுறுத்தியும், இரத்ததானம் செய்வதற்கான தகுதிகள், அவற்றின் நன்மைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய துண்டு பிரசுரங்களை கொடுத்தனர். மேலும் அன்றே காலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரத்ததான முகாமில் பங்கேற்று குருதிக்கொடையளிக்கும் படியும் கேட்டுக்கொண்டனர். இம்முகாமிற்கு ராஜீவ்காந்தி பொதுமருத்துவமனையின் நடமாடும் இரத்தவங்கி ஊர்தி வரவழைக்கப்பட்டிருந்தது. மருத்துவர். பத்மா அவர்கள் மற்றும் குழுவினர். வந்திருந்தனர். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சத்யசாய் முதியோர் இல்ல நிர்வாக உறுப்பினர். திருமதி சாந்தா அம்மையார் கலந்து கொண்டு குருதிக்கொடையாளர்களை வாழ்த்தினார். இம்முகாமில் பொதுமக்கள் உள்ளிட்ட 38 பேர் குருதிக்கொடை வழங்கினார்கள்.


பெண்மையைப் போற்றுவோம் பேரணி:
மார்ச் -8 உலக மகளிர்தினமாக கொண்டாடப்படுவதையொட்டி மார்ச்-7 அன்றே பெண்மையைப் போற்றுவோம் என்ற தலைப்பில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும், பெண்மையைப் போற்ற வேண்டும், மனித சமூகம் உயர்வு பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு நாட்டுநலப்பணித்திட்டத்  தொண்டர்களின் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் பெண்பாதுகாப்பை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் எடுத்துச் சென்றனர். பெண் பாதுகாப்பை வலியுறுத்தும் வாசகங்களை உரக்கச் சொல்லியும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இப்பேரணியை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை, மருத்துவர். திருமதி. பத்மா அவர்கள் துவக்கி வைத்தார்.


முகாம் நிறைவு விழா:
                                      
முகாம் நிறைவு விழா மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது. இதில் சத்யசாய் முதியோர் இல்லத்தின் நிர்வாக உறுப்பினர். திருமதி. சாந்தா அம்மையார் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு மாணவர்களின் பல்வேறு தொண்டுகளுக்கு நன்றி பாராட்டி வாழ்த்திப் பேசினார். விழாவிற்கு குருநானக் கல்லூரியின் வேதியியல் துறைப் பேராசிரியர். திரு. செல்வராஜ் அவர்கள் தலைமை தாங்கி மாணவர்கள் சீரிய பணிகளை வாழ்த்திப் பேசினார். விழாவின் இறுதியாக நாட்டுநலப்பணித்திட்டத் தொண்டர்களான, தினேஷ், சதிஷ், சந்தோஷ், மோனிகா, கரிஷ்மா ஆகியோர் முகாமில் தாங்கள் கற்றதும் பெற்றதும் என்னவென்பதை பிற மாணவர்களோடு பகிர்ந்து கொண்டார்கள்.



முகாமின் ஒவ்வொரு நாளும் பல்வேறு பேராசிரியர்கள் மற்றும் பிரபலங்கள் வந்து மாணவர்களை வாழ்த்திய வண்ணம் இருந்தனர். 3.3.2013 அன்று கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உயர்திரு.சின்னைய்யா அவர்கள் நன்மங்கலம் வந்த பொழுது மாணவர்கள் செய்த பணிகளைக் கண்டு வாழ்த்திப் பேசினார். ஊராட்சி மன்ற தலைவர் திருமதி செல்வராணி சுந்தர் அவர்களும் மாணவர்களை மனதாரப் பாராட்டினார்.


நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்களான முனைவர் மு. மூர்த்தி, திருமதி  பி. சசிகலா, திரு மு.தியாகராஜ், திருமதி ஞானசங்கரி மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட தொண்டர்கள் இம்முகாமினைச் சிறப்புற நடத்தினர்.

மாணவர்களின் பல்வேறு பணிகளும் படங்களும்:



                                                                     நன்றி

Sunday, 3 March 2013

தமிழக அரசின் வனத்துறை - குருநானக் கல்லூரி நா.ந.திட்டம்- மரம் நடும் விழா

குருநானக் கல்லூரி நாட்டுநலப்பணித்திட்டமும், கல்லூரியின் தாவரவியல் துறையும் - தமிழக வனத்துறையுடன்  இணைந்து தமிழக முதல்வரின் 65 வது பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் 65 மரங்களை நட்டனர். 

Thursday, 17 January 2013

குருநானக் கல்லூரி - செஞ்சுருள் சங்க விழா (9.01.2013)

குருநானக் கல்லூரி - செஞ்சுருள் சங்க விழா
வாழ்க்கையைக் கொண்டாடுவோம் -2013


      குருநானக் கல்லூரி செஞ்சுருள் சங்கம் - நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் 9.01.2013 புதன் கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் வாழ்க்கையைக் கொண்டாடுவோம் -2013 என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த இவ்விழாவில் 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் சென்னை மாவட்ட மேற்பார்வையாளர் திரு. ஜெயபாண்டி அவர்கள் கலந்து கொண்டார். அவர் மாணவர்களுக்கு எய்ட்ஸ் நோய் பரவும் முறைகள், அதனைக் கட்டுப்படுத்தும் முறைகள், எய்ட்ஸ் நோய் குறித்த மூடநம்பிக்கைகள் ஆகியவற்றை மாணவர்களிடையே சிறப்புறவும், அறிவியல் பூர்வமாகவும் எடுத்துரைத்தார். அவரது பேச்சின் இறுதியில் மாணவர்களின் வினாக்களுக்கு விடையளித்து அவர்களது சந்தேகங்களை நீக்கினார்.

இவ்விழாவில் கலந்து கொண்ட மற்றொரு சிறப்பு விருந்தினரான திருமதி. பாக்கியலட்சுமி அவர்கள். தான் எவ்வித தவறும் செய்யாமலேயே எய்ட்ஸ் நோய்க்கு  ஆளாக நேர்ந்ததையும், பிறகு அதனையே ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு தன்னைப் போல் வேறு எவரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டதையும் எடுத்துக் கூறினார். மேலும் மாணவர்கள் தவறான பாதையைத் தேர்ந்தெடுக்காமல் ஒழுக்கமாக இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

கல்லூரி முதல்வர் முனைவர். மெர்லின் மொரைஸ் அவர்கள் முன்னிலை வகிக்க, விழாவிற்கு வந்திருந்த விருந்தினர்களை செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர். முனைவர்.மு.மூர்த்தி வரவேற்றுப் பேசினார்.  நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்களான திருமதி. சசிகலா மற்றும் திருமதி. ஞானசங்கரி ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர்  திரு. மு. தியாகராஜ் நன்றியுரை  வழங்கினார்.

Monday, 17 December 2012

நாட்டுநலப்பணித்திட்டம்- மாணவர் புத்தாக்கப் பயிற்சி(17.12.2012)


     
              நாட்டுநலப்பணித்திட்டத்தில் புதியதாக இணைந்துள்ள முதலாமாண்டு மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி இன்று(17.12.2012) கல்லூரி கருத்தரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

     தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சிக்கு, வந்திருந்த சிறப்பு விருந்தினர் பேராசிரியர். திரு.B. குமரன் அவர்களை நா.ந.ப.தி.அலுவலர் முனைவர். மு.மூர்த்தி அவர்கள் வரவேற்றார்.

          இதில் சுமார் 150 மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
குருநானக் கல்லூரியின் முன்னாள்  நாட்டுநலப்பணித்திட்ட அலுவலரான திரு.B.குமரன் அவர்கள், நாட்டுநலப்பணித்திட்டம் என்றால் என்ன, இவ்வமைப்பு சமூகத்திற்கும், இன்றைய இளைஞர்களுக்கும் எவ்விதம் உதவுகின்றது என்பது குறித்தும் நா.ந.ப.திட்டத்தின் கொள்கைகள் குறித்தும் மாணவர்களுக்கு எளிமையாகவும் இனிமையாகவும் எடுத்துரைத்தார்.

          உணவு இடைவேளைக்குப் பிறகு நாட்டுநலப்பணித்திட்டத்தின் மூத்த மாணவர்களான தினேஷ்குமார், குபேரன், சந்தோஷ், மோனிகா ஆகியோர் தாம் நாட்டுநலப்பணித்திட்டத்திலிருந்து  கற்றதும் பெற்றதும்  என்ன என்பதை சிறந்த அனுபவப் பகிர்தலாக புதிய நா.ந.ப.திட்ட தொண்டர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

              கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக உருவாக்கப்பெற்ற வலைப்பக்கம்  http://gncnss.blogspot.in/  ஐ  கல்லூரியின் முதல்வர். திருமதி. மெர்லின் மொரைஸ் அவர்கள், குருநானக் கல்லூரி(சுழற்சி2) இயக்குநர்.   முனைவர். திரு. ஆபிரகாம் தேவகுமார் அவர்கள் முன்னிலையில் துவக்கி வைத்து மாணவர்களிடையே நாட்டுநலப்பணித்திட்டத்தின் சிறப்புகளை எடுத்துரைத்தார். குறிப்பாக இரத்ததானத்தில் நமது கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட தொண்டர்கள் உயிர் காக்கும் மருந்தாக சிறப்பாக செயல்படுவதை வெகுவாகப் பாராட்டி வாழ்த்தினார்.
              
                புதியதாக துவங்கப்பட்டுள்ள வலைப்பக்கமான http://gncnss.blogspot.in/  ஐ  மாணவர்கள் எவ்விதம் பயன்படுத்த வேண்டும். அதில் இணைக்கப்பட்டுள்ள இணையதள இரத்ததான கொடையாளர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் முறைகள் எப்படி என்பது குறித்து நா.ந.ப.தி.அலுவலர்  மு.தியாகராஜ் அவர்கள் மாணவர்களிடையே விளக்கினார்.

        இவ்விழாவிற்கு வருகை புரிந்த மற்றொரு சிறப்பு விருந்தினரான  பேராசிரியர். முனைவர். ப. மகாலிங்கம் அவர்கள் நாட்டு நலப்பணித் தொண்டர்கள்  தங்களைச் சமூக வளர்ச்சிக்கு  எவ்விதம் அர்பணித்து கொள்ள வேண்டும் என்பதை தமக்கே உரிய இனிய பாணியில் விளக்கினார்.

 நாட்டு நலப்பணித் திட்டத்தின் புதிய மாணவர்கள், நாட்டுநலப்பணித்திட்டத்தின் உறுதிமொழியைப் பேராசிரியர். மு.தியாகராஜ்  வாசிக்க மீண்டும் கூறி உறுதிமொழி எடுத்தனர்.

          முனைவர்.மு.மூர்த்தி அவர்கள் நன்றியுரை கூறி நிறைவடைந்த இவ்விழாவினை நா.ந.ப.திட்ட அலுவலர்களான பேராசிரியை.P.சசிகலா மற்றும் பேராசிரியை. ஞானசங்கரி உள்ளிட்ட நா.ந.தி.அலுலவலர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இவ்விழா முழுவதையும் மாணவி. சத்யா தொகுத்து வழங்கினார்.

குருநானக் கல்லூரி-நாட்டுநலப்பணித்திட்டத்தின் சாதனைகள்

ஒரு வரலாற்றுப் பார்வை:

Friday, 28 September 2012

GNC - NSS வலைப்பூ அறிமுகம்



 








    



 வணக்கம் அனைவருக்கும்

உலகத்தீரே யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற அன்பு நெறியோடு பிரதிபலன் எதிர்பாராமல் நாட்டுக்கு நம்மால் இயன்றதை செய்ய வேண்டும் என்ற அன்போடும் ஆர்வத்தோடும் நாட்டு நலப்பணித் திட்டத்தில் இணைந்துத் தொண்டாற்றி வரும் அனைவருக்கும் எம் குருநானக் கல்லூரி நாட்டுநலப்பணித்திட்டத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இவ்வலைப்பூவில் சென்னை, வேளச்சேரியில் உள்ள எமது கல்லூரியான குருநானக் கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்டத்தின் முந்தைய சாதனைகளும், தற்போதைய நிகழ்ச்சிகளும் உடனுக்குடன் பதிவாக இடப்படும். 

இது எங்கள் சாதனைகளை பறைசாற்றிக் கொள்ளும் தளமல்ல, எங்களின் சேவைகளைக் கண்ணுறும் சமுகத்தார்க்கு, தாமும் இதுபோல் சேவைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற ஊக்கத்தை ஏற்படுத்தும்  தூண்டுகோலாக அமையும் தளம் ஆகும்.

இனி வரும் பதிவுகளில் எம் கல்லூரியின் நாட்டுநலப்பணித் திட்டத்தின் சாதனைகளை பதிவிடுகின்றேன்.

என்றும் அன்புடன்

    மு.தியாகராஜ்
நா.ந.திட்ட அலுவலர்
குருநானக் கல்லூரி